இத்தாலியில் இருந்து வந்த புனித அந்தோணியாரின் ‘‘அழியாத உடல் உறுப்புகள்’’ நாளை கோவை கொண்டுவரப்படுகிறது


இத்தாலியில் இருந்து வந்த புனித அந்தோணியாரின் ‘‘அழியாத உடல் உறுப்புகள்’’ நாளை கோவை கொண்டுவரப்படுகிறது
x
தினத்தந்தி 4 March 2017 4:00 AM IST (Updated: 4 March 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

இத்தாலியில் இருந்து வந்த புனித அந்தோணியாரின் அழியாத உடல் உறுப்புகள் நாளை கோவை கொண்டு வரப்பட்டு, தூய திருத்துவ தேவாலயத்தில்சிறப்பு வழிபாடு நடக்கிறது.

புனித அந்தோனியார் திருப்பண்டம்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் புனிதராக போற்றப்படும் அந்தோணியாரின் ஆலயங்கள் நாட்டின் பல இடங்களில் உள்ளன.786 வருடங்களுக்கு முன் மறைந்த புனித அந்தோணியாரின் அழியாத உறுப்புகள் (எலும்பு, சதை) திருப்பண்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உறுப்புகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. காலை 8 மணிக்கு கோவை ராமநாதபுரத்தில் உள்ள தூய திருத்துவ பேராலயத்தில் வைக்கப்பட்டு ஆயர் பால் ஆலப்பாட் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் 12 மணிவரை திருப்பண்ட சிறப்பு ஆராதனை நடக்கிறது. அதன் பின்னர் திருப்பண்டம் எட்டிமடைக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள அசிசி சிநேகாலயா ஆசிரம மையத்தில் வைக்கப்பட்டு கப்புச்சின் சபை பாதிரியார் பெர்னாட்ஷா தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 4.30 மணிமுதல் 7 மணிவரை திருப்பண்ட சிறப்பு ஆராதனை நடக்கிறது. முன்னதாக திருப்பண்டம் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து பவனியாக எடுத்து வரப்படுகிறது.

நீலகிரி

முன்னதாக புனித அந்தோணியாரின் திருப்பண்டம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தூய மரியன்னை தேவாலயத்திற்கு இன்று (சனிக்கிழமை) கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

இது குறித்து ராமநாதபுரம் தூய திரித்துவ ஆலய பங்கு குரு ஜான்சன் வீபாட்டுப்பரம்பில்,எட்டிமடை அசிசி சிநேகாலயா அதிபர் எலியாஸ் அடிகள் ஆகியோர் கூறியதாவது:–

அழியாத உறுப்புகள்

இறைவனின் வரங்களை அதிகம் பெற்று, நற்செய்தியை (பைபிள்), உலகமெங்கும் பரப்பியவர் புனிதர் அந்தோணியார். கோடி அற்புதங்கள் செய்ததால் இவர் கோடி அற்புதர் என்று அழைப்படுகிறார். இவர் கடந்த 1231–ம் ஆண்டு ஜூன் 13–ந் தேதி மறைந்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கல்லறையை திறந்து பார்த்தபோது, உயிர் துடிப்புள்ள அவரது நாவும், சிதையாத எலும்புகளும், அழுகாமல் உறுதியுடன் காணப்பட்ட சில உடல் உறுப்புகளும் அழியாமல் கிடைத்தன. இது மிகவும் பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இவைகள் புனித பண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த புனித திருப்பண்டங்கள் இத்தாலியில் உள்ள பதுவைநகரின் பிரான்சிஸ்கன் குருவானவர்களின் பராமரிப்பின் கீழ் உள்ள திருத்தல ஆலயத்தில் பாதுகாப்புடன் இன்றுவரை வைக்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது.

அரிய வாய்ப்பு

இந்த நிலையில் பிரான்சிஸ்கன் குருவானவர்களின் முயற்சியால் இந்த திருப்பண்டங்கள் (எலும்பின் ஒரு சிறு துண்டு, இறுகிய சதைப்பகுதி) பொதுமக்கள் தரிசிக்க இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டுக்கு அந்த திருப்பண்டம் எட்டிமடையில் உள்ள சிநேகாலயா ஆசிரமத்தின் முயற்சியால் கொண்டு வரப்படுகிறது. ஆகவே புனித அந்தோணியாரின் பக்தர்கள், கிறிஸ்தவ மக்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அவரது பரிந்துரையால் இறையாசீர் பெற்றிட வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story