அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் பலி
கோட்டைப்பட்டினம் அருகே அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்நிலையில் நேற்று அம்மாப்பட்டினத்தில் இருந்து ஜெய்னுள் ஆப்தீன், அதே பகுதியை சேர்ந்த முகமது ஆனந்த் (17), இசாத் அகமது (17) ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில், கோட்டைப்பட்டினத்தில் உள்ள பாரீஸ் கூப்பிட்டு வர சென்றனர்.
பின்னர் பாரீஸ், ஜெய்னுள் ஆப்தீன் ஒரு மோட்டார் சைக்கிளும், முகமது ஆனந்த், இசாத் அகமது மற்றொரு மோட்டார் சைக்கிளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து அம்மா பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது முகமது ஆனந்த், இசாத் அகமது சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ஓடார் விமடம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வேளாங்கண்ணியில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற சுற்றுலா வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. அப்போது பின்னால் பாரீஸ், ஜெய்னுள் ஆப்தீன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்டு வலது புறத்தில் முகமது ஆனந்த், இசாத் அகமதும், இடது புறத்தில் பாரீஸ், ஜெய்னுள் ஆப்தீனும் விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெய்னுள் ஆப்தீன் இறந்தார்.
மாணவர்கள் பலி
அப்போது, தூத்துக்குடி இருந்து காரைக்கால் நோக்கி வந்த ஒரு சரக்கு வேன் எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்து கிடந்த பாரீஸ் மீது மோதியது. இதில் சரக்கு வேனின் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட பாரீஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாமாக இறந்தார். முகமது ஆனந்த், இசாத் அகமது ஆகியோர் எந்த வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கதறி அழுதனர்
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட மாணவர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் அங்கு வந்து மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சை கதற வைப்பதுபோல இருந்தன. பின்னர் இது குறித்து கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சரவணன் மற்றும் போலீசார் வந்தனர். பின்னர் 2 மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றியும் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர்கள் கைது
பின்னர் போலீசார் விபத்திற்கு காரணமான சரக்கு வேன் டிரைவர் காரைக்காலை சேர்ந்த கார்த்திகேயன் (40), சுற்றுலா வேன் டிரைவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி மோதியதில் 2 மாணவர்கள் பலியான சம்பவம் அந்த கோட்டைப்பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.