மேயர் தேர்தலுக்கு முன்பு பென்குயின்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க முடிவு? நிலைக்குழு கமிட்டியினர் வாழ்விடத்தை பார்வையிட்டனர்


மேயர் தேர்தலுக்கு முன்பு  பென்குயின்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க முடிவு? நிலைக்குழு கமிட்டியினர் வாழ்விடத்தை பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 3 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-04T02:46:14+05:30)

பைகுல்லா பூங்காவில் பென்குயின்களை வைக்க அமைக்கப்பட்டுள்ள வாழ்விட அரங்கை மாநகராட்சி நிலைக்குழுவினர் பார்வையிட்டனர்.

மும்பை,

பைகுல்லா பூங்காவில் பென்குயின்களை வைக்க அமைக்கப்பட்டுள்ள வாழ்விட அரங்கை மாநகராட்சி நிலைக்குழுவினர் பார்வையிட்டனர். மும்பை மேயர் தேர்தலுக்கு முன்பாக பென்குயின்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என கூறப்படுகிறது.

பென்குயின்கள் வருகை

மும்பை பைகுல்லாவில் அமைந்துள்ளது பழமையான ராணி பூங்கா. இங்கு மான், நீர்யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக அரியவகை உயிரினமான பென்குயின் பறவைகளை வாங்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டது.

இதையடுத்து மும்பை மாநகராட்சி ரூ.2½ கோடிக்கு 8 பென்குயின்களை தென்கொரியாவிடம் இருந்து வாங்கியது. இந்த பென்குயின்கள் கடந்த ஆண்டு ஜூலை 26–ந்தேதி சியோலில் இருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டன.

ஒரு பென்குயின் உயிரிழப்பு

பின்னர் அவை ராணி பூங்காவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறையில் பராமரிக்கப்பட்டன. பென்குயின்களை 24 மணிநேரமும் மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர். நவம்பர் மாதம் பென்குயின்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பென்குயின்களை வைப்பதற்காக பல கோடி ரூபாய் செலவில் பனிபிரதேச தட்பவெப்ப சூழலை கொண்ட வாழ்விடம் ராணி பூங்காவில் அமைக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அக்டோபர் மாதம் துரதிருஷ்டவசமாக டோரி என்ற பெண் பென்குயின் உயிரிழந்தது.

தாமதம்

இதையடுத்து பென்குயின்களை திரும்பவும் தென் கொரியாவிற்கே அனுப்பிவிட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் பென்குயின்களை பொதுமக்களின் பார்வைக்காக வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் பென்குயின்களை பொதுமக்களின் பார்வைக்காக வைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டது.

மேயர் தேர்தலுக்கு முன்..

மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே தற்போது மாநகராட்சியில் அதிகாரம் செய்து வரும் சிவசேனா மேயர் தேர்தலுக்கு முன் பென்குயின்களை பொது மக்களின் பார்வைக்கு திறக்க தீவிரம் காட்டி வருகிறது. தற்போதைய மேயர் சினேகல் அம்பேக்கர், மாநகராட்சி கமி‌ஷனருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே இன்னும் ஒரு சில நாட்களில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே பென்குயின்கள் வாழ்விட அரங்கை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையிட்டனர்

இந்தநிலையில் நேற்று மாநகராட்சி நிலைக்குழுவை சேர்ந்தவர்கள் பென்குயின்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வாழ்விட அரங்கை பார்வையிட்டனர். இது குறித்து ராணி பூங்கா மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பென்குயின்களுக்கான வாழ்விடம் தயாராகிவிட்டது. ஏற்கனவே அங்கு பென்குயின்களை வைத்து சோதனை செய்து விட்டோம். திறப்பு விழாவிற்கு முன் பென்குயின்கள் அதற்காக அமைக்கப்பட்ட வாழ்விடத்திற்கு கொண்டு செல்லப்படும். மார்ச் 6–ந்தேதிக்குள் பென்குயின்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க கெடு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. எனவே இன்னும் சில நாட்களில் பென்குயின் வாழ்விட அரங்கம் திறந்து வைக்கப்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story