மும்பை, புனேயில் கூடுதல் சிறைச்சாலைகள் கட்ட 3 மாதங்களுக்குள் இடம் தேர்வு செய்யவேண்டும் மாநில அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


மும்பை, புனேயில் கூடுதல் சிறைச்சாலைகள் கட்ட 3 மாதங்களுக்குள் இடம் தேர்வு செய்யவேண்டும் மாநில அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 March 2017 3:04 AM IST (Updated: 4 March 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

மும்பை, புனேயில் கூடுதல் சிறைச்சாலைகள் கட்ட 3 மாதங்களுக்குள் இடம் தேர்வு செய்யவேண்டும் என மாநில அரசுக்கு, மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பை, புனேயில் கூடுதல் சிறைச்சாலைகள் கட்ட 3 மாதங்களுக்குள் இடம் தேர்வு செய்யவேண்டும் என மாநில அரசுக்கு, மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

3 மாதத்திற்குள்...

மராட்டியத்தில் உள்ள சிறைச்சாலைகளின் அவல நிலை குறித்து தனியார் தொண்டு நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், சிறையில் அதிகமான கைதிகளை அடைத்து வைத்திருப்பது, அடிப்படை வசதியின்மை, மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் சுட்டி காட்டப்பட்டு இருந்தன. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அபய் ஒகா மற்றும் சையது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

இதில், மனுவை விசாரித்த நீதிபதிகள் மும்பை, புனேயில் கூடுதல் சிறைசாலைகள் கட்ட 3 மாதங்களுக்குள் இடத்தை தேர்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

கமிட்டி அமைக்க வேண்டும்

மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:–

அறிவியல் பூர்வமாக, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் நவீன சிறைச்சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் வல்லுனர்களை கொண்ட கமிட்டியை மாநில அரசு அமைக்க வேண்டும். அரசு அமைக்கும் கமிட்டியினர் தங்கள் ஆய்வை முடித்து, அது குறித்த அறிக்கையை 6 மாதத்திற்குள் கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும். மேலும் சிறைச்சாலைகளுக்குள் எல்லா வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி அமைக்கப்பட வேண்டும்.

அதில், தேர்ந்த டாக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் கைதிகளை மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சைக்காக வெளியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை இருக்காது.

பெண்கள் சிறையில் பள்ளி...

பைகுல்லா பெண்கள் சிறையில் எத்தனை வயது வரை சிறுபிள்ளைகள் கைதிகளுடன் தங்க வைக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அரசு ஒரு தெளிவான முடிவிற்கு வரவேண்டும். அதன்பிறகு தேவைப்பட்டால் பெண்கள் சிறையில் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் படிக்க மழலையர், தொடக்க பள்ளிகளை தொடங்க வேண்டும்.

முடியாத பட்சத்தில் ஜெயிலுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் அந்த குழந்தைகள் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story