ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரத்தில் போராட்டம்


ஒகேனக்கல்லில்  பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரத்தில் போராட்டம்
x
தினத்தந்தி 7 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-07T19:22:39+05:30)

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் மீன்பிடி மற்றும் சமையல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

வேலைநிறுத்த போராட்டம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு பரிசல் ஓட்டிகள், மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் மற்றும் சமையல் தொழிலாளர்கள் என 500–க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒகேனக்கல்லில் பணிபுரியும் பரிசல் ஓட்டிகள், மீன்பிடி மற்றும் சமையல் தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பென்னாகரம் பஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஒகேனக்கல் பரிசல் மீன்பிடி மற்றும் சமையல் தொழிலாளர்கள் சங்க தலைவர் வரதன் தலைமை தாங்கினார். பொருளாளர் பெருமாள், மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிவாரண உதவிகள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், மாவட்ட தலைவர் மாரிமுத்து, நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட இணைசெயலாளர் ராஜூ ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அப்போது ஒகேனக்கல் ஆற்றில் ஏற்கனவே பரிசல் இயக்கி வந்த வழித்தடங்களான மாமரத்து கடவு, ஊட்டமலை, கோத்திக்கல் ஆகிய 3 வழித்தடங்களில் வெள்ளப்பெருக்கு அளவிற்கேற்ப பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும். பரிசல் துறையில் தற்போது வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் ரூ.150 என்பதை குறைத்து ரூ.10 ஆக நிர்ணயிக்க வேண்டும்.

பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்படும் போது தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். பரிசல் துறையின் சார்பில் பரிசல் தொழிலாளர்களுக்கு ஓய்வறை மற்றும் கழிப்பிட வசதியும், பரிசல் பழுதுபார்க்கவும், பரிசலை நிறுத்தி வைக்கவும் இடம் ஒதுக்கி தர வேண்டும்.

நவீன சமையலறை

பரிசல்துறை மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வழிப்பாதை ஏற்படுத்தவும், கண்ணாடி கூண்டு பொதுவழியை திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல்லில் சமையல் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுக்கு நவீன சமையலறை கட்டித்தர வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story