1½ லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை ஓரிரு நாட்களில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்


1½ லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை ஓரிரு நாட்களில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்
x
தினத்தந்தி 7 March 2017 11:00 PM GMT (Updated: 7 March 2017 7:35 PM GMT)

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை அவர்களது வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும்

விருதுநகர்,

குடிநீர் பணிகள்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், மாவட்டத்தில் குடிநீர் பணிகள் முன்னேற்றம் தொடர்பான அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாகளிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 18 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகையினை கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கி வறட்சி நிவாரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசும்போது அவர் தெரிவித்ததாவது :-

வறட்சி என்றாலும் சரி, வெள்ளம் என்றாலும் சரி மக்களுக்காக அனைத்து தேவைகளையும், உரிய நிவாரணதொகையினையும் அரசு உரிய நேரத்தில் வழங்கி வருகிறது. அதன்படி வடகிழக்கு பருவழை பொய்த்ததன் காரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலையை சமாளிக்க நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது. அதன்படி நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் ஒரே சீராக கிடைக்கும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

ஆழ்துளைக்கிணறு

குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் குடிநீர் உள்ள இடங்களை கண்டறிந்து அங்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு சீராக இயங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிப்பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கவும், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகத்தை சீராக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தடையின்றி குடிநீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் 9 தாலுகாகளிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக 74 கோடியே 86 லட்சத்து 14 ஆயிரத்து 863 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

ஓரிரு நாளில்

இந்த நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து ஓரிரு நாட்களுக்குள் மின்னணு பரிவர்த்தனை மூலம் வரவு வைக்கப்பட்டுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுக்கும் பணியினை சிறப்பாக செய்த அனைத்து அரசு அலுவலர் களுக்கு பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில், விருது நகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சுப்பிரமணியன், சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.கே.மயில்சாமி, கூட்டுறவு அச்சகத்தலைவர் சித்திக் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Next Story