தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-08T02:05:45+05:30)

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை அமைந்து உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3–ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5–வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். இதில் ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., எம்.எல்.எப்., அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பணிகள் முடக்கம்

ஆர்ப்பாட்டத்தின் போது, தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்திய பின்பு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக நூற்பாலையில் பணிகள் முடங்கி உள்ளன.


Next Story