மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 7 March 2017 11:00 PM GMT (Updated: 7 March 2017 8:42 PM GMT)

தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

கோட்டைப்பட்டினம்,

ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். இதனை கண்டித்து ராமேசுவரம் மற்றும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 750- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்வது வழக்கம்.தற்போது வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கி உள்ளதால், மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

பேட்டி

இது குறித்து மீனவ சங்க தலைவர் ராமதேவன் தினந்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இத்தனை நாளாக மீனவர்களையும், விசைப்படகு களையும் கைது செய்தல், மீனவர்களை அடித்தல் , வலைகளையும், விசைபடகினையும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டி தனமாக துப்பாக்கி சூடு நடத்தி ஒரு மீனவரை கொன்றுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசும், மாநில அரசும் மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க இனியாவது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணம் வழங்க வேண்டும்

துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்ட பகுதியை சேர்ந்த 37 விசைப்படகுகளையும், 19 மீனவர்களையும் உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.


Next Story