இன்று மும்பை மாநகராட்சி மேயர் தேர்தல் மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்றுகிறது சிவசேனா


இன்று மும்பை மாநகராட்சி மேயர் தேர்தல் மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்றுகிறது சிவசேனா
x
தினத்தந்தி 7 March 2017 11:30 PM GMT (Updated: 7 March 2017 9:24 PM GMT)

மும்பை மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் மேயர், துணை மேயர் பதவியை சிவசேனா கைப்பற்றுகிறது.

மும்பை,

மும்பை மாநகராட்சி

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 21–ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சிவசேனா 84 இடங்களை கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக பா.ஜனதா கட்சி 82 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் 31 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 9 வார்டுகளிலும், மராட்டிய நவநிர்மாண் சேனா 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் மும்பை மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றப் போவது யார்? என்ற பலத்த எதிர்பார்ப்பு உண்டானது.

மேயர் தேர்தல்

இதில் சிவசேனா, பா.ஜனதா இடையே கடும் போட்டி ஏற்பட்டது. சிவசேனா சார்பில் மேயர் வேட்பாளராக விஸ்வநாத் மகாதேஷ்வர், துணை மேயர் வேட்பாளராக ஹேமாங்கி வர்லிக்கர் அறிவிக்கப்பட்டனர்.

இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நிமிடம் வரையிலும் பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த பரபரப்பான சூழலில் பா.ஜனதா திடீரென மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. மேயர் தேர்தலில் தேவைப்பட்டால் சிவசேனாவை ஆதரிப்போம் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

சிவசேனா கைப்பற்றுகிறது

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மேயர் பதவிக்கு வித்தல் லோஹரே, துணை மேயர் பதவிக்கு வினி டிசோசா ஆகியோர் போட்டியிட்ட உள்ளனர். மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மேயர் தேர்தலும், அதைத் தொடர்ந்து துணை மேயர் தேர்தலும் நடக்கிறது.

இதில் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றாலும் அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

எனவே மாநகராட்சியில் சிவசேனா பலத்துடன் ஒப்பிடுகையில், காங்கிரசின் பலம் குறைவு என்பதால் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாநகராட்சி அதிகாரத்திற்கு வர வாய்ப்பு மிகவும் குறைவே.

எனவே மீண்டும் சிவசேனாவை மாநகராட்சி அதிகாரத்திற்கு வருவது உறுதியாகி உள்ளது. எனவே மும்பை மாநகராட்சி மேயராக விஸ்வநாத் மகாதேஷ்வரும், துணை மேயர் வேட்பாளராக ஹேமாங்கி வர்லிக்கரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


Next Story