ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி


ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2017 12:15 AM GMT (Updated: 2017-03-08T03:56:11+05:30)

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

ஆய்வு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குமரன் நகரில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். மேலும், மதுரைசாமி மடம் அருகில் உள்ள சென்னை உருது பள்ளி, கே.சி.கார்டன் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, ஜி.கே.எம். காலனியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

அதேபோல, கபிலர் தெருவில் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கினார். மரணம் அடைந்த தி.மு.க. தொண்டர் ஏசுதாஸ் என்பவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, உதவித்தொகை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குளறுபடி அறிக்கை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி அரசின் சார்பில் திடீரென ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் இருக்கக்கூடிய வாசகங்களை படித்துப்பார்த்தோம் என்றால், அவை வேதனையாக மட்டுமல்ல, வேடிக்கையாகவும் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சாதாரண காய்ச்சல், அதேபோல நீர்ச்சத்து குறைபாடு இருக்கிறது. இரண்டொரு நாளில் அது முழுமையாக சரி செய்யப்பட்டு அவர் இல்லம் திரும்புவார், என்று தான் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், போயஸ் தோட்டத்திலிருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவ மனைக்கு வருகிற நேரத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். செயற்கை சுவாசத்தின் மூலமாகத்தான் அவருக்கு மூச்சு விடக்கூடிய சூழ்நிலை இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, டிசம்பர் 4-ந்தேதி இதயத்துடிப்பு நின்றது குறித்து வந்த அறிக்கைக்கும், தற்போது வெளிவந்து இருக்கக்கூடிய அறிக்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள், நிறைய குளறுபடிகள் இருக்கிறது.

நீதி விசாரணை

இரண்டு நாட்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஓ.பி.எஸ் தான் முதலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். ஓ.பி.எஸ். என்ன சொல்கிறார் என்றால், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கரிடம் தான் முறையான விசாரணை நடத்திட வேண்டும் என்று சொல்கிறார். ஆகவே, இப்படி இரண்டு பேரும் மாறி மாறி சொல்வதைப் பார்க்கின்றபோது, அப்பன் குதிருக்குள் இல்லை என்ற நிலையில்தான் இந்த செய்திகள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன.

எனவே, முறையான நீதி விசாரணை நடத்தினால்தான் ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா? விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா? அப்பல்லோ மருத்துவமனை சொல்வது உண்மையா? அல்லது எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கை உண்மையா? வெளியில் பரவிக் கொண்டிருக்கும் அந்த செய்திகள் உண்மையா? என்பது நாட்டுக்கு நன்றாக, வெளிப்படையாக தெரிய வரும். எனவே, தி.மு.க.வை பொறுத்தவரையில், உடனடியாக முறையான ஒரு நீதி விசாரணையை நடத்தி மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story