ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம்


ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-09T00:28:11+05:30)

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி, கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

கோவை,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்க மத்திய அரசை வற்புறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தாமோதரன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். நடிகர் ஆர்.சுந்தர்ராஜன், திரைப்பட இயக்குனர் பவித்ரன், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆதரவு

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பவித்ரன் பேசியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது மறைவுக்கு பின்னர் அடுத்த தலைவர் யார்? என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், ஜெயலலிதாவின் சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்து தெளிவான முடிவை அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு உள்ளது.

1972–ல் எம்.ஜி.ஆர். என்ற பெயர் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது போல, ஓ.பன்னீர்செல்வமும் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டுபிடிக்க கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்ராஜன் பேசும்போது, ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து பொதுமக்களுக்கு தெரியும். எனவே அவர் எப்படி கொல்லப்பட்டார்? என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும். ஜெயலலிதா இறந்து 72–வது நாளில் சசிகலா சிறைக்கு சென்றுவிட்டார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.

தொண்டர்கள் யார் பக்கம்?

முன்னாள் அமைச்சர் தாமோதரன் பேசியதாவது:–

அ.தி.மு.க.வில் உள்ள 99 சதவீத தொண்டர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க நீதி விசாரணை அமைக்க கோரி நடைபெறும் இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உள்ளனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் சாரை சாரையாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள். ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, சிங்கை ராமச்சந்திரன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் ஆர்.கணேஷ், கோகுலம் தங்கராஜ், வக்கீல் ராஜேந்திரன், மோகன்ராஜ், சால்ட் வெள்ளியங்கிரி, துரைசாமி, ராதா, மு.சந்திரசேகர், வெண்தாமரைபாலு, பி.கே.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆதரவாளர்களின் பெயர்களை பதிவு செய்தனர்

உண்ணாவிரத பந்தலில் தனி இடம் ஒதுக்கப்பட்டு கணினி மூலம் பெயர் பதிவு செய்யும் பணி நடைபெற்றது. அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பெயர், முகவரியை கூறி உறுப்பினர் அட்டைகளுடன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளிப்பதாக பதிவு செய்தனர். கோவையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story