பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு


பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து  மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 8 March 2017 9:45 PM GMT (Updated: 2017-03-09T00:47:26+05:30)

பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்ற பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடத்தூர்,

கோபி அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்ற 2 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வீட்டுக்குள் புகுந்த பெண்கள்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி சுபத்ரா (வயது 63). அவருடைய மாமியார் ஆறுவிருத்தியம்மாள் (87). சுபத்ராவும், ஆறுவிருத்தியம்மாளும் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று மதியம் 1.45 மணி அளவில் 2 பேரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீட்டு மெயின் கதவை திறந்துகொண்டு 2 பெண்கள் வந்தனர். அதில் ஒரு பெண் சேலையும், மற்றொருவர் சுடிதாரும் அணிந்திருந்தனர். அவர்கள் 2 பேரிடமும், இந்த பகுதியில் வீடு எதுவும் வாடகைக்கு கிடைக்குமா? என நைசாக பேச்சு கொடுத்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த 2 பெண்களும் சிறிது நேரம் கழித்து, ‘‘தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் கொடுங்கள்’’ என்று கேட்டனர்.

நகை பறிப்பு

அதைத்தொடர்ந்து அந்த பெண்களுக்கு தண்ணீர் குடிக்க கொடுத்தனர். பின்னர் அதில் சேலை அணிந்த பெண், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், பசிக்கிறது சாப்பாடு வேண்டும் என்றும் கேட்டார். இதைத்தொடர்ந்து ஆறுவிருத்தியம்மாள் 2 பெண்களையும் உள்ளே அழைத்துக்கொண்டு சாப்பாடு கொடுத்தார். சுபத்ரா வீட்டின் முன்பு உட்கார்ந்திருந்தார்.

மாலை 3.45 மணி வரை 3 பேரும் வீட்டின் உள்ளேயே இருந்தனர். அதன்பின்னர் 2 பெண்களும் டீ போட்டு தாருங்கள் என்று கேட்டனர். இதைத்தொடர்ந்து ஆறுவிருத்தியம்மாள் டீ போட்டு 2 பேருக்கும் கொடுத்தார். அதில் சேலை அணிந்த பெண் மட்டும் டீ குடித்தார். மற்றொரு பெண் டீயை குடிக்காமல் அதில் நைசாக மயக்க மருந்து கலந்தார். பின்னர் அந்த டீயை ஆறுவிருத்தியம்மாளிடம் கொடுத்தார். அதை வாங்கி அவர் குடித்தார். டீ குடித்த சிறிது நிமிடத்தில் ஆறுவிருத்தியம்மாள் மயக்கம் அடைந்தார். இதை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த 2 பெண்களும், அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியையும், 2 பவுன் வளையல்களையும் பறித்துக்கொண்டு வெளியே தப்பி ஓடினார்கள்.

போலீசார் விசாரணை

இதை பார்த்த சுபத்ராவுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஆறுவிருத்தியம்மாள் மயக்கத்தில் இருந்து தெளிந்தார். பின்னர் ஆறுவிருத்தியம்மாள் ‘2 பெண்கள் நகையை திருடிவிட்டு செல்கிறார்கள் பிடியுங்கள் பிடியுங்கள்’ என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், வாகனங்களில் துரத்திச்சென்று 2 பெண்களையும் பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர்.

அதைத்தொடர்ந்து கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் 2 பெண்களிடமும் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த சசிகுமார் மனைவி செங்காம்பு (31), சென்னை கே.கே.நகரை சேர்ந்த குமார் மனைவி சித்ரா (30) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்துச்சென்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story