அவினாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


அவினாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-09T02:13:12+05:30)

அவினாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவினாசி,

அவினாசியை அடுத்த பள்ளிபாளையம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதி பொதுமக்களுக்கு மாதம் ஒருமுறை மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

எனவே குடிநீர் கேட்டு பள்ளிபாளையம் பகுதி பொதுமக்கள் திரண்டு சென்று பூண்டி–பெரியாயிபாளையம் சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது பற்றிய தகவல் அறிந்ததும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி விஜயகுமார், பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி (பொறுப்பு), மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:– எங்கள்பகுதிக்கு குடிநீர் சீராக வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story