நாய் கடித்து இறந்து போனதாக நினைத்து உயிர் பிழைத்த அதிசய சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு


நாய் கடித்து இறந்து போனதாக நினைத்து உயிர் பிழைத்த அதிசய சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 8 March 2017 8:48 PM GMT (Updated: 8 March 2017 8:47 PM GMT)

தார்வார் அருகே நாய் கடித்து இறந்து போனதாக நினைத்து உயிர் பிழைத்த அதிசய சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

உப்பள்ளி,

தார்வார் அருகே நாய் கடித்து இறந்து போனதாக நினைத்து உயிர் பிழைத்த அதிசய சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

உயிர் பிழைத்த சிறுவன்

தார்வார் தாலுகா மணகுந்தி கிராமத்தை சேர்ந்தவன் சுத்திராயா (வயது 16). இவன் கடந்த மாதம்(பிப்ரவரி) 18–ந் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது, அவனை தெருநாய் ஒன்று கடித்தது. இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் தெருநாயிடம் இருந்து சுத்திராயாவை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுத்திராயா, தார்வார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு அவனது உடல் நிலை மோசமானதால் சுத்திராயாவை காப்பாற்ற முடியாது என்றும், வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றும் டாக்டர்கள் அவனுடைய பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சுத்திராயாவை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 20–ந்தேதி சுத்திராயாவின் உடலில் எந்தவித அசைவும் இல்லை. இதனால் அவன் இறந்துவிட்டதாக நினைத்து, சுத்திராயாவின் பெற்றோரும், உறவினர்களும் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், இறுதி சடங்கின்போது சிறுவன் சுத்திராயா திடீரென்று எழுந்து அமர்ந்தான். இதனை பார்த்து அவனுடைய பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே சுத்திராயா மயங்கி விழுந்தான். இதையடுத்து அவனை சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவனது உயிருக்கு டாக்டர் 48 மணி நேரம் கெடு விதித்து இருந்தார். ஆனால் அந்த 48 மணி நேரத்திற்குள் சிறுவன் சுத்திராயாவுக்கு எதுவும் ஆகவில்லை. இதனால் அவனுக்கு உடல்நலம் சரியாகி விட்டதாக டாக்டர்கள் கருதினர். இதையடுத்து சிறுவன் சுத்திராயா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டான். அவனின் உடல்நலத்தை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிறுவன் சுத்திராயாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் உடல்நிலையும் மோசமானது. இதனால் டாக்டர்கள் அவனை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் சுத்திராயா பரிதாபமாக இறந்தான். சிறுவன் இறந்த செய்தியை கேட்ட அவனது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

பெரும் சோகம்

இதையடுத்து சிறுவன் சுத்திராயாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுத்திராயாவின் சொந்த ஊரான மணகுந்தியில் அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறந்து போனதாக நினைத்து உயிர் பிழைத்த அதிசய சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



Next Story