மைசூரு காகித தொழிற்சாலை நிர்வாகத்தின் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


மைசூரு காகித தொழிற்சாலை நிர்வாகத்தின் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2017 8:58 PM GMT (Updated: 2017-03-09T02:27:47+05:30)

மைசூரு காகித தொழிற்சாலை நிர்வாகத்தின் முடிவை கண்டித்து தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்ராவதி,

மைசூரு காகித தொழிற்சாலை நிர்வாகத்தின் முடிவை கண்டித்து தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மைசூரு காகித தொழிற்சாலை

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் மாநில அரசுக்கு சொந்தமான மைசூரு காகித தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையால் மாநில அரசுக்கு கடன் சுமை ஏற்பட்டதால், கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தொழிற்சாலையில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும் விருப்ப ஓய்வு கொடுக்க உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி, ஆண்டு ஊக்கப்படி, 2012–ம் ஆண்டின் சம்பள உயர்வு என மொத்தம் ரூ.396.72 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது.

தர்ணா போராட்டம்

இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதாவது, பஞ்சப்படி, ஆண்டு ஊக்கப்படி, 2012–ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு போன்றவற்றை வழங்க இயலாது என்றும், ஓய்வு ஊதிய திட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு ரூ.182 கோடி மட்டுமே வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சாலை நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து நேற்று முதல் தர்ணா போராட்டத்தை தொழிலாளர்கள் தொடங்கி உள்ளனர். அவர்கள், தொழிற்சாலைக்கு முன்பு பந்தல் அமைத்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.


Next Story