கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது


கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 March 2017 9:01 PM GMT (Updated: 2017-03-09T02:30:34+05:30)

பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 6.84 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 6.84 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பி.யூ.கல்லூரி பொதுத் தேர்வு

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மாநிலத்தில் மொத்தம் 6 லட்சத்து 84 ஆயிரத்து 490 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் மாணவர்கள் 3 லட்சத்து 48 ஆயிரத்து 562 பேரும், மாணவிகள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 909 பேரும், திருநங்கைகள் 19 பேரும் அடங்குவார்கள்.

இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 998 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 103 மையங்கள் பதற்றமானவை என்றும், 38 மையங்கள் அதிக பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. 2 ஆயிரத்து 175 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீரென சோதனைகளை நடத்துவார்கள்.

பறக்கும் படைகள்

தாலுகா அளவில் கல்லூரி முதல்வர்கள் தலைமையில் 858 நடமாடும் பறக்கும் படைகளும், மாவட்ட அளவில் 83 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் நிருபர்களிடம் கூறியதாவது:–

போலீஸ் பாதுகாப்பு

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு நாளை (அதாவது, இன்று) தொடங்குகிறது. இந்த தேர்வில் முறைகேடுகளை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள்கள் அனைத்து மாவட்ட கருவூலங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் அங்கு பயோமெட்ரிக் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதனால் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பு இல்லை.

தவறுகளை தடுக்க சட்ட ரீதியான தண்டனைகளும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. கடுமையாக உழைத்து படிக்கும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படக்கூடாது. படிக்காத மாணவர்கள் குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை தடுக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும்.

144 தடை உத்தரவு

கர்நாடகத்தில் நல்ல கல்வி முறை உள்ளது. தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஜெராக்ஸ் கடைகள் இருந்தால் அவற்றை மூட வேண்டும். இந்த பகுதிக்குள் கூட்டமாக சேரக்கூடாது. மாணவ–மாணவிகள் பயப்பட தேவை இல்லை. அவர்கள் தைரியமாக தேர்வு எழுத வேண்டும். தவறான வதந்திகளுக்கு செவி சாய்க்கக்கூடாது. மாணவ–மாணவிகள் நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு மந்திரி தன்வீர்சேட் கூறினார்.


Next Story