ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2017 9:07 PM GMT (Updated: 8 March 2017 9:06 PM GMT)

நித்திரவிளை அருகே ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நித்திரவிளை,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், கடத்தல்காரர்கள் பல்வேறு நூதன வழிமுறைகளை கையாண்டு அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியர், துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் நேற்று அதிகாலை நித்திரவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு பயணிகள் ஆட்டோ வேகமாக சென்றது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. அதிகாரிகள் அந்த ஆட்டோவை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

400 கிலோ ரேஷன் அரிசி

உடனே டிரைவர், ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். ஆட்டோவை சோதனை செய்தபோது 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த அரிசி மூடைகளையும், ஆட்டோவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அரிசி மூடைகள் காப்புக்காடு அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story