ஈத்தாமொழியில் பஸ்-டெம்போ மோதல்; தொழிலாளி பலி 4 பேர் படுகாயம்


ஈத்தாமொழியில் பஸ்-டெம்போ மோதல்; தொழிலாளி பலி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-09T02:36:55+05:30)

ஈத்தாமொழியில் பஸ்-டெம்போ பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈத்தாமொழி,

நாகர்கோவிலில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை புதூருக்கு புறப்பட்டது. அதை நித்திரவிளை அருகே உள்ள நடைக்காவை சேர்ந்த சுரேஷ் (வயது 29) என்பவர் ஓட்டி சென்றார்.

அந்த பஸ் காலை 6 மணி அளவில் ஈத்தாமொழி ஜங்ஷன் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது புதூரில் இருந்து தேங்காய் உரிப்பதற்காக 4 தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ வந்தது. அதை கேசவன் புதூரை சேர்ந்த சிவராஜன் என்பவர் ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், டெம்போவும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டெம்போவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ் கண்ணாடியும் உடைந்தது.

தொழிலாளி பலி

இந்த விபத்தில் டெம்போவில் வந்த புதூர் அருகே உள்ள காளியாயன்விளையை சேர்ந்த தொழிலாளி வைகுண்டராஜன் (42) நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும் டெம்போவில் இருந்த கேசவன்புதூரை சேர்ந்த பாபு, புதூரை சேர்ந்த குமரேசன், காற்றாடி தட்டை சேர்ந்த நாகராஜன், டெம்போ டிரைவர் சிவராஜன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஈத்தாமொழியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பஸ் டிரைவர் சுரேஷ் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விசாரணை

இந்த விபத்து குறித்து ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

வைகுண்டராஜனுக்கு கவிதா (35) என்ற மனைவியும், ஹரீஷ் (11) என்ற மகனும், அதன்யா (10) என்ற மகளும் உள்ளனர். ஹரீஷ் 6-ம் வகுப்பும், அதன்யா 5-ம் வகுப்பும் படிக்கிறார்கள். 

Next Story