அண்ணன்-தம்பியை வெடிகுண்டு வீசி கொன்ற கூலிப்படை தலைவன் கைது


அண்ணன்-தம்பியை வெடிகுண்டு வீசி கொன்ற கூலிப்படை தலைவன் கைது
x
தினத்தந்தி 8 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-09T02:36:56+05:30)

சிதம்பரத்தில் அண்ணன்-தம்பியை வெடிகுண்டு வீசி கொன்ற கூலிப்படை தலைவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடலூர்,

சென்னை மடிப்பாக்கத்தைச்சேர்ந்த கைலாசநாதன் என்பவருடைய மகன் சங்கர்லால்(வயது35). கூலிப்படை தலைவனான இவர் மீது சிலைக்கடத்தல் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

2009-ம் ஆண்டு சென்னை அண்ணாநகர், தாம்பரம், மயிலாடுதுறை குற்றாலம், செம்பனார்கோவில், சென்னை புழல் உள்ளிட்ட இடங்களில் சிலைகளை திருடி கடத்திய வழக்கில் சங்கர்லாலை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இதேப்போல் 2013-ம் ஆண்டு காரைக்காலில் சாராயவியாபாரி ராமுவை கூலிக்காக கொலை செய்த வழக்கில் காரைக்கால் போலீசார் தேடி வந்தனர்.

வெடிகுண்டு வீசி கொலை

2014-ம் ஆண்டு சிதம்பரம் கலுங்குமேட்டைச்சேர்ந்த ஆம்புலன்ஸ் குமார், அவரது தம்பி ராஜேஷ் ஆகியோரை வெடிகுண்டு வீசி கொலை செய்து, குமாரின் தலையை வெட்டியெடுத்துச் சென்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வாசலில் வைத்துச்சென்ற வழக்கில் அண்ணாமலை போலீசாரும் தேடி வந்தனர்.

இதனால் சங்கர்லாலை கைது செய்யுமாறு கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சங்கர்லாலை டெல்டா பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

கைது

விசாரணையில் சங்கர்லால் கோவை மாவட்டம் அவினாசியில் வாடகைக்கு வீடு எடுத்து சீர்காழியைச்சேர்ந்த கள்ளக்காதலியுடன் தங்கியிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகைக்கு நேற்று காலையில் வருவதை அறிந்த டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீஸ் படையினர் சங்கர்லாலை சுற்றிவளைத்து பிடித்து, கைது செய்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story