கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:06 PM GMT)

ஆரல்வாய்மொழியில் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

ஆரல்வாய்மொழி,

தமிழக கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை விரைவில் பேசி ஒப்பந்தம் ஏற்படுத்திட வேண்டும், ஆரல்வாய்மொழி நூற்பாலையில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதியில் இருந்து அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ., பி.எம்.எஸ். ஆகிய 4 தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

தினமும் நூற்பாலை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. இதனால் நேற்று காலை நூற்பாலை முன் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற 3 தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தர்ணா போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். ஜான்பாக்கியதாஸ்(சி.ஐ.டி.யூ), மகராஜ பிள்ளை, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் இளங்கோ தொடக்க உரையாற்றினார். பி.எம்.எஸ். மாநில செயலாளர் குமாரதாஸ், சக்திவேல், அய்யம்பெருமாள், தர்மராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் தங்கமோகன், தர்ணா போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். 

Next Story