கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 11 பவுன் நகை- பணம் திருட்டு


கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 11 பவுன் நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 8 March 2017 9:08 PM GMT (Updated: 8 March 2017 9:08 PM GMT)

கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 11 பவுன் நகை- பணம் திருட்டு

திருவையாறு,

திருவையாறு அருகே உள்ள மணக்கரம்பை எஸ்.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது38). இவர் ராராமுத்திரக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான மெலட்டூருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது பின்பகுதியில் உள்ள வாசல் திறந்து கிடந்தது. மேலும் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சீனிவாசன் நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் திருவையாறு போலீஸ் துணை சூப்பிரண்டு அன்பழகன், இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகதாசன், சேவகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story