தர்மபுரி மாவட்ட வனத்துறை சார்பில் வனமகளிர் குழுக்களுக்கு ரூ.22 லட்சம் சிறுதொழில் கடன்உதவி


தர்மபுரி மாவட்ட வனத்துறை சார்பில் வனமகளிர் குழுக்களுக்கு ரூ.22 லட்சம் சிறுதொழில் கடன்உதவி
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:08 PM GMT)

தர்மபுரி மாவட்ட வனத்துறை சார்பில் வன மகளிர் குழுக்களுக்கு ரூ.22 லட்சம் சிறுதொழில் கடன்உதவி வழங்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் 40 சதவீத வனப்பகுதி உள்ளது. வனங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், வனப்பகுதிகளையொட்டி வசிக்கும் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் எந்த விதமான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வனத்திற்கு அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வனத்துறையால் தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்டம், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், மலைவாழ் மக்கள் சங்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டங்கள் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 168 வன மகளிர் குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த வன மகளிர் குழுக்களுக்கு வனத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தர்மபுரி வனக்கோட்டம், ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்ட கிராமத்தில் உள்ள வன மகளிர் குழுக்களுக்கு கறவை மாடுகள் வாங்குதல், ஆடு வளர்த்தல் மற்றும் சிறுதொழில்கள் தொடங்க கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்றது.

பொருளாதார மேம்பாடு

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் திருமால் கலந்து கொண்டு, குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை என மொத்தம் 11 வன மகளிர் குழுக்களுக்கு ரூ.22 லட்சம் சிறுதொழில் கடன்உதவிகளை வழங்கினார். உதவி வனப்பாதுகாவலர் பிரியதர்ஷினி, பென்னாகரம் வனச்சரக அலுவலர் குணசேகரன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக கடன்பெற்ற வனமகளிர் குழுவினர் கூறுகையில், வனத்துறை மூலம் குறைந்த வட்டியில் கடன்உதவி கிடைக்கிறது. இதனால் அதிக வட்டிக்கு வெளியாட்களிடம் கடன் வாங்குவது தவிர்க்கப்படுகிறது. இந்த கடன்உதவியை கொண்டு பொதுமக்களுக்கு தேவைப்படும் பொருட்களை குறைந்த விலையில் தயாரித்து வழங்குகிறோம். இதன்மூலம் நாங்கள் பொருளாதார மேம்பாடு அடைவதோடு எங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story