விபத்தில் மூதாட்டி இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் மூதாட்டி இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:10 PM GMT)

விபத்தில் மூதாட்டி இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் பெரம்பலூரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர்,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). கடந்த 11-4-2011 அன்று இவர், சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கவனக்குறைவால் அந்த அரசு பஸ், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து இழப்பீடு கேட்டு செல்லம்மாளின் மகன் கஜேந்திரன், மகள் சாந்தகுமாரி ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 14-11-2011-ல் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி உத்தரவு

இந்த வழக்கில் கஜேந்திரன், சாந்தகுமாரி ஆகியோருக்கு ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்தை இழப்பீடாக கும்பகோணம் கோட்ட திருச்சி அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 30-6-2014-ல் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. எனினும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையை வழங்காமல் இழுத்தடித்ததால் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை கஜேந்திரன் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமாபானு, விபத்து வழக்கில் கஜேந்திரன், சாந்தகுமாரி ஆகியோருக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பதால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும், மேலும் வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 71 ஆயிரத்து 221-ஐ இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அரசு பஸ் ஜப்தி

அதன்பேரில் நேற்று ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு துறையூர் செல்வதற்காக பெரம்பலூர் புது பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு அமீனாக்கள் ஜப்தி செய்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி மாற்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். மேலும் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது. 

Next Story