‘குற்றச்செயல்களை தடுக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் பேச்சு


‘குற்றச்செயல்களை தடுக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் பேச்சு
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-09T02:45:31+05:30)

குற்றச்செயல்களை தடுக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் குற்றச் செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. இதற்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லிக்குப்பம் மற்றும் மருதாடு ஆகிய பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே அதுபோன்ற சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. குற்ற செயல்களை போலீசாரால் மட்டுமே தடுத்து விட முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளை 25 கிராமமாக பிரித்து உள்ளோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் முதலில் உங்களை நேரில் வந்து சந்தித்து அறிமுகம் செய்து கொள்வார். இரவு நேரம் ரோந்து பணிக்கு வரும்போது அந்த போலீஸ்காரருடன் பொதுமக்கள் 4 பேர் ரோந்து வர வேண்டும். இதன் மூலம் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை எளிதாக தடுக்கலாம்.

கண்காணிப்பு கேமரா

அதேபோல் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடிப்பதற்கு வசதியாக நகை, அடகுகடை மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். போலீசார் ரோந்து வரும் போது கண்காணிப்பு கேமரா அமைக்காத நகை மற்றும் அடகு கடைகள் பட்டியலை சேகரித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பகல் அல்லது இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டை திறந்து வைத்துக்கொண்டு வேலைகளை பார்க்க கூடாது. உங்கள் தனிப்பட்ட பண விவரங்களை உறவினர், நண்பர்கள் தவிர வேறு நபர்கள் இருக்கும்போது சத்தமாக பேச கூடாது. அறிமுகம் இல்லாத வெளியூர்காரர்களுக்கு வீடு வாடகைக்கு விடும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக குற்ற செயல்களை தடுப்பது குறித்த 25 வகையான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினார்கள். 

Next Story