தண்ணீர் லாரிகள் 3–வது நாளாக வேலை நிறுத்தம், கம்ப்யூட்டர் நிறுவனங்களை மூடும் அபாயம்


தண்ணீர் லாரிகள் 3–வது நாளாக வேலை நிறுத்தம், கம்ப்யூட்டர் நிறுவனங்களை மூடும் அபாயம்
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 8 March 2017 9:46 PM GMT)

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3–வது நாளாக போராட்டம் நடத்துவதால், கம்ப்யூட்டர் நிறுவனங்களை தண்ணீர் இல்லாமல் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூர்,

சென்னையை ஒட்டியுள்ள தாழம்பூர், தையூர், புதுப்பாக்கம், இள்ளலூர், திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தண்ணீர் எடுத்துவருகின்றனர். அந்த தண்ணீரை பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

குறைந்த விலைக்கு எடுத்து அதிக விலைக்கு விற்பதாகவும், அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதாகவும் வருவாய்த்துறைக்கு புகார்கள் சென்றதால் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து சில நாட்களுக்கு முன்பு 5–க்கும் மேற்பட்ட லாரிகளை கைப்பற்றினர்.

வேலைநிறுத்தம்

அந்த லாரிகளை விடுவிக்கக்கோரி தென்சென்னை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 5–ந் தேதி வருவாய்த்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் ஏற்படாததால் 6–ந் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் சிறுசேரி முதல் செம்மஞ்சேரி வரை சர்வீஸ் சாலையில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் சென்னை புறநகர் பகுதி, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மட்டுமின்றி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முடிவுகாண வேண்டும்

3–வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தால் தண்ணீர் இல்லாமல் கம்ப்யூட்டர் நிறுவனங்களை மூடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள தண்ணீர் லாரி உரிமையாளர்களிடம் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த போராட்டம் தொடர்ந்தால் சென்னை புறநகர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கம்ப்யூட்டர் நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என தெரிகிறது. எனவே உடனடியாக இதற்கு ஒரு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


Next Story