மீனவர் சுட்டுக்கொலை: பனையூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்; சாலை மறியல்


மீனவர் சுட்டுக்கொலை: பனையூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்; சாலை மறியல்
x
தினத்தந்தி 8 March 2017 10:15 PM GMT (Updated: 8 March 2017 9:46 PM GMT)

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பனையூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம்,

ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (வயது 21) இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் குப்பம், உய்யாலிக்குப்பம், சதுரங்கப்பட்டினம் மற்றும் மெய்யூர் குப்பங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார் புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவ பஞ்சாயத்தார் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். கருப்பு சட்டை அணிந்தும் கருப்பு கொடியேந்தியும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் உள்பட பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பிற்பகல் வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அந்த பகுதியில் கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கூவத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை எல்லையம்மன் கோவில், பனையூர், கடப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திடீரென சென்னை–புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story