காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்


காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 8 March 2017 9:49 PM GMT (Updated: 2017-03-09T03:18:16+05:30)

காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்,

பீகார் மாநிலம் நாளந்தா பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன் பிந்து (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ரூனி (19). இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்வதில் காதல்ஜோடியினர் உறுதியாக இருந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நிரஞ்சன்பிந்து, ரூனி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் எதிர்ப்பு இருப்பதால் புதுமண தம்பதியினர் வேறு எங்காவது சென்று வாழலாம் என முடிவு எடுத்தனர்.

வி‌ஷம் குடித்து சாவு

நிரஞ்சன் பிந்துவின் நண்பரான, பீகாரை சேர்ந்த புத்தான்சதீஸ் சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே வசித்து வந்தார். எனவே கடந்த 6–ந் தேதி புத்தான்சதீஸ் வீட்டிற்கு நிரஞ்சன்பிந்து, ரூனி ஆகியோர் வந்தனர். பின்னர் அவர்கள் அதே வீட்டில் குடும்பம் நடத்தினர். இந்தநிலையில் நேற்று நிரஞ்சன்பிந்து குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, ரூனி வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூனி சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரூனி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீசார் ரூனியின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூனி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story