எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 10:45 PM GMT)

விருதுநகரில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையத்தில் கலெக்டர் சிவஞானம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். விருதுநகரில் உள்ள சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் சிவஞானம் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் இன்று (நேற்று) தொடங்கியுள்ளன. வருகிற 30–ந்தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 100 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 340 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 35 மையங்களில் 4,399 மாணவர்களும், 4,634 மாணவிகளும், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 33 மையங்களில் 5,351 மாணவர்களும், 5,415 மாணவிகளும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 32 மையங்களில் 4,405 மாணவர்களும், 4,616 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

28,820 பேர்

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, மற்றும் விருதுநகர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 14,155 மாணவர்களும், 14,665 மாணவிகளும் ஆக மொத்தம் 28,820 மாணவ மாணவிகளும், தனித்தேர்வர்களாக சுமார் 804 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வுகளை கண்காணிக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக வயது வந்தோர் கல்வி மற்றும் பள்ளி சாரா கல்வி இயக்கக இணை இயக்குநர் செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உடனிருந்தார்.


Next Story