திருப்பத்தூர் அருகே என்.புதூரில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


திருப்பத்தூர் அருகே என்.புதூரில்  போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 8 March 2017 10:56 PM GMT (Updated: 2017-03-09T04:25:47+05:30)

திருப்பத்தூர் அருகே என்.புதூர் பகுதியில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து என்.புதூர் வழியாக பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொன்னமராவதி–புதுக்கோட்டை இணைப்பு சாலையில் இந்த வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை கடந்த ஓராண்டாக சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் சிறிய மழைக்கு கூட தாங்காமல் இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் ஓட்டிச்செல்கின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடந்த ஓராண்டாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், சரிசெய்ய காலம் தாழ்த்தி வருகின்றனர்.

செப்பனிட வேண்டும்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த சாலை வழியாகவே திருச்சி விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சாலையை விரைந்து சீரமைத்தால் மட்டுமே வாகனங்கள் பயன்படுத்த முடியும். இல்லையென்றால் கரடுமுரடான இந்த சாலையில் மாட்டுவண்டிகள் கூட செல்ல முடியாது என்று வாகன ஓட்டிகள் ஆதங்கப்படுகின்றனர். பல வருடங்களுக்கு பிறகு என்.புதூரில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற உள்ளது. தற்போது சேதமடைந்துள்ள சாலை வழியாகவே மஞ்சுவிரட்டு காண பல்வேறு பகுதிகளில் இருந்து மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் வாகனங்களில் வருவார்கள். அப்போது பல்லாங்குழிகளாக காணப்படும் இந்த சாலையில் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பஸ்கள் புறக்கணிப்பு

இவ்வாறு குண்டும் குழியுமான இந்த சாலையால் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் என்.புதூர், புதுப்பட்டி ஆகிய கிராமங்களை புறக்கணித்து நெடுஞ்சாலை வழியாக தம்பிப்பட்டி சென்று திருப்பத்தூர் வருகின்றன. இதனால் 2 கிலோ மீட்டர் அளவிலான டீசல் வீணடிக்கப்படுகிறது. தம்பிப்பட்டி வழியாக செல்வதால் சந்தை பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே என்.புதூர் பகுதி சாலையினை சரி செய்து போக்குவரத்துக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story