முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18–ந் தேதி கோவை வருகை
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18–ந் தேதி கோவை வருகிறார். அவர், கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் உள்பட 127 கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
கோவை
கோவையில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மதுக்கரை, பேரூரில் கட்டப்பட்டுள்ள புதிய தாலுகா அலுவலக கட்டிடங்கள், பள்ளி கல்வித் துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவு, வேளாண்மைத் துறை மூலம் மொத்தம் ரூ.679 கோடியே 63 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 127 புதிய கட்டிடங் களின் திறப்பு விழா, 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 18–ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார். மேலும் ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங் களில் கட்டி முடிக்கப்பட்ட அரசின் பல்வேறு துறை அலுவலக கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் அவர் திறந்து வைக்கிறார்.
ஆலோசனை கூட்டம்இதில் கலந்து கொள்வதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18–ந் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். முதல்–அமைச்சர் வருகையையொட்டி, கலெக்டர் ஹரிகரன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது.
போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி, மாவட்ட வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன், பயிற்சி கலெக்டர் பிரியங்கா, ஊரக வளர்ச்சி அதிகாரி ரூபன்சங்கர் ராஜா, மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் பேசும்போது, ‘முதல்–அமைச்சர் வருகையையொட்டி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.