கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்


கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்தி கொள்ளிடம் ஆற்றில் இருந்து புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கி உள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் நீர்வளம் பாதிக்கப்படும் எனவும், விவசாயம் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. எனவே கூட்டு குடிநீர் திட்டத்தை அமல் படுத்துவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். அதன்படி நேற்று திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் காலிக் குடங்களுடன் இறங்கி, பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவக்குமார், பூதலூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் காந்தி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் தாசில்தார் கஜேந்திரன், தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேலு, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், திருச்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வளர்மதி ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து போராட்ட குழுவினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சை உதவி கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.

போராட்டம் தொடரும்

கிராம மக்களின் போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவக்குமார் கூறியதாவது:- திருச்சினம்பூண்டி பகுதியில் விவசாயத்தை முழுவதும் அழிக்கக்கூடிய கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிட வேண்டும். திட்டத்தை கைவிட தஞ்சை உதவி கலெக்டர் ஒப்புதல் அளிக்காவிட்டால் திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story