பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: அண்ணன்-தம்பி உள்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி


பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: அண்ணன்-தம்பி உள்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியை சேர்ந்த அண்ணன்-தம்பி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

பெரம்பலூர்,

சென்னை ஆவடி ஸ்ரீ தேவிநகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராஜன் (வயது 50). இவரது, தம்பி சவரிராஜன் (45). இவர்களது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள செங்கிப்பட்டி கிராமம் ஆகும். இந்த நிலையில் ஜேம்ஸ்ராஜனின் தாத்தாவிற்கு 40-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்பகுதியில் படத்திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஜேம்ஸ்ராஜன், அவரது மனைவி மகாலட்சுமி (44), சவரிராஜன், அவரது மனைவி ஜூலி (40) மற்றும் ஜேம்ஸ்ராஜன்-சவரிராஜனின் தங்கையும், ஸ்டீபன் என்பவரது மனைவியுமான ஷர்மிளா (37) ஆகிய 5 பேரும் சென்னையிலிருந்து புறப்பட்டு ஒரு காரில் தஞ்சாவூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சவரிராஜன் ஓட்டி சென்றார்.

கார்-லாரி மோதல்

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் கருப்பையா கோவில் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வந்த போது அங்கு வளைவில் திரும்பிய ஒரு லாரி மீது, சவரிராஜன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் அந்த கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த ஜேம்ஸ்ராஜன், அவரது தம்பி சவரிராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ஷர்மிளா, மகாலட்சுமி, ஜூலி ஆகியோர் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் படுகாயமடைந்த ஷர்மிளா உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

4 பேர் பலி

இதற்கிடையே விபத்தில் இறந்த ஜேம்ஸ்ராஜன், சவரிராஜன் ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

இதற்கிடையே பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையிலிருந்த ஷர்மிளாவும் பரிதாபமாக இறந்தார். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகாலட்சுமி, ஜூலி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மகாலட்சுமியும் இறந்ததால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

லாரி டிரைவர் கைது

போலீசாரின் விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நயினார்குடிகாடு பகுதியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (26) என்பதும், வாலிகண்டபுரம் சிறுகுடல் பகுதியில் குவாரியில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு முள்ளுக் குறிச்சி பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்து நடந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அலெக்ஸ்பாண்டியனை கைது செய்தனர்.

Next Story