கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் ராமேசுவரத்தில் நாளை நடக்கிறது
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நாளை (18–ந்தேதி) ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்கவேண்டும். இதை வலியுறுத்தி ராமேசுவரத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நான் (ஜி.கே.மணி) உள்பட மீனவ சங்க தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நீதி வேண்டும். அவரை சுட்டுக் கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்து இந்திய சிறையில் அடைக்க வேண்டும். இலங்கை அரசிடம் இருந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்று மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 128 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதேபோல ஈரான் நாட்டு சிறையில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி மீனவர்களையும் மீட்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வடமாநில மீனவர்கள் மீது அக்கறை செலுத்தும் மத்திய அரசு தமிழக மீனவர்களை புறக்கணித்து வருகிறது. இந்த நிலை மாறவேண்டும்.
வறட்சிதமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுஉள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அனைத்து அணைகளும், நீர்த்தேக்கங்களும் வறண்டு விட்டன. அவற்றை தூர்வார வேண்டும். மாநில அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரண நிதி போதாது. மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் தந்து வறட்சி நிவாரண நிதியை பெற்று வழங்க வேண்டும். தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ. தரத்திற்கேற்ப தமிழகத்தில் கல்வித்தரம் இல்லை. எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.