அடிப்படை வசதி கோரி தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ராஜபாளையம் அருகே மொட்டைமலை பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே மொட்டைமலை பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர், சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், ராஜபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். நூலகம், உணவுக்கூடம், குடிநீர், கழிப்பறை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி இந்த கல்லூரியில் படித்து வரும் 80 மாணவிகள் உள்பட 180–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள் கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.