ஓமலூர் அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி பணம் இல்லாததால் மர்ம ஆசாமிகள் ஏமாற்றம்
ஓமலூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் அந்த பகுதி பொதுமக்கள் பணம் எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஏ.டி.எம். மைய கதவு திறந்து இருந்ததை கண்டனர். பின்னர் அவர்கள், மையத்தின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது மையத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
கொள்ளை முயற்சிஇதுகுறித்து ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை போலீசார் பார்வையிட்டனர். பின்னர் தனியார் ஏ.டி.எம். மையத்தின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அங்கு வந்து எந்திரத்தை பார்த்துவிட்டு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அதில் பணம் வைக்கப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போலீசார் கூறும்போது, ‘‘யாரோ மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்று இருக்கிறார்கள். ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பே எந்திரத்தில் பணம் தீர்ந்து விட்டது. எனவே, பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்‘‘ என்றனர்.
கண்காணிப்பு கேமராஇதையடுத்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதில் பதிவாகி இருக்கும் உருவங்களை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரின் மையப்பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.