பெண்ணாடத்தில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை–பணம் பறிப்பு 2 பேர் கைது
பெண்ணாடத்தில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லட்சுமணன் (வயது 28). இவர் பானிப்பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் பெண்ணாடம் சுமைதாங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலத்தில் இருந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், லட்சுமணனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 2 மோதிரம், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் பதறிய லட்சுமணன் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர்.
2 பேர் கைதுபின்னர் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்த ராஜாராமன் மகன் அசோக்குமார்(35), விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டை சேர்ந்த முகமதுஉசேன் மகன் அகமதுபாஷா(37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அசோக்குமார், அகமதுபாஷா ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்கள் லட்சுமணனிடம் இருந்து பறித்துச் சென்ற 2 மோதிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.