பண்ருட்டி அருகே பிளஸ்–2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை வேதியியல் தேர்வு சரியாக எழுதாததால் விபரீத முடிவு
பண்ருட்டி அருகே வேதியியல் தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்–2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் சுதாகரன்(வயது 17). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 13–ந் தேதி நடந்த பிளஸ்–2 வேதியியல் பொதுத்தேர்வை சுதாகரன் சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டைவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வரவில்லை. இதனால் பதறிய அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும், சுதாகரன் கிடைக்கவில்லை.
முந்திரிதோப்பில் தூக்கில் பிணம்இதற்கிடையில் நடுக்காட்டுப்பாளையத்தில் உள்ள முந்திரிதோப்பில் சுதாகரன் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுதாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வு சரியாக எழுதாததால் சுதாகரன் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.