வேலூர் சைதாப்பேட்டையில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


வேலூர் சைதாப்பேட்டையில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 March 2017 2:30 AM IST (Updated: 16 March 2017 7:31 PM IST)
t-max-icont-min-icon

குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

வேலூர்,

வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாகக்கூறி பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

குடிநீருடன் சாக்கடை கலந்து வருகிறது

வேலூர் சைதாப்பேட்டை 28–வது வார்டில் மாநகராட்சி சார்பில் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 7 வாரங்களாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையும் வழக்கம்போல குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போதும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் சைதாப்பேட்டை மெயின் பஜாருக்கு திரண்டு வந்தனர்.

காலிகுடங்களுடன் மறியல்

அவர்கள் கோடையிடி குப்புபசாமி மாநகராட்சி மேல்நிலை பள்ளி அருகில் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ– மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். ஆட்டோக்களும் செல்ல முடியவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சென்று மறியல் செய்த பொதுமக்களுடன் பேசி மறியலை கைவிடுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாராமன் பொதுமக்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இதேபோன்று சைதாப்பேட்டையில் 25–வது வார்டில் உள்ள சுருட்டுக்கார தெரு, தாதர் தெரு, தோப்பாசாமி தெரு பகுதிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரிலும் கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் கலந்து வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story