போடியில் குறி சொல்வதாக கூறி மயக்க பொடியை தூவி 5 பவுன் நகை பறிப்பு பெண்ணுக்கு வலைவீச்சு


போடியில் குறி சொல்வதாக கூறி மயக்க பொடியை தூவி 5 பவுன் நகை பறிப்பு பெண்ணுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 March 2017 3:45 AM IST (Updated: 16 March 2017 10:13 PM IST)
t-max-icont-min-icon

போடியில் குறி சொல்வதாக கூறி மயக்க பொடியை தூவி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போடி,

விவசாயி

தேனி மாவட்டம் போடி புறநகர் போலீஸ் சரகம் சிலமலை டி.எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவருடைய மனைவி சுமதி (வயது 40). நேற்று காலையில் பன்னீர்செல்வம் தனது தோட்டத்துக்கு சென்று விட்டார். அப்போது சுமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அந்த வேளையில் குறி சொல்வது போல் ஒரு பெண் சுமதி வீட்டுக்கு வந்தார். பின்னர் இந்த வீட்டில் வாஸ்து சரியில்லை என்றும், உங்களுக்கு குறி சொல்லி அதுகுறித்து விளக்கமாக கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் தனக்கு குடிக்க தண்ணீர் தருமாறு கூறியுள்ளார்.

மயக்கபொடி தூவி நகை பறிப்பு

இதை உண்மை என்று நம்பிய சுமதி வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் மீது அந்த பெண் மயக்க பொடியை தூவினார். இதனால் சற்று நேரத்தில் சுமதி மயங்கி விழுந்தார். உடனே அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு அந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த சுமதி தனது கழுத்தில் கிடந்த நகை காணாமல் போனதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து தனது கணவர் பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் போடி புறநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.

போடி அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story