வேடசந்தூர் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேடசந்தூர் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்
மின்மோட்டார் பழுது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் ஊராட்சி தொப்பாநாயக்கனூர், ஆவலக்கவுடனூர் பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். புங்கம்பாடி பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் அங்கு அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர்தொட்டியில் சேமிக்கப்படுகிறது.
பின்னர் குழாய்கள் மூலம் புங்கம்பாடி, கோவிலூர், தொப்பாநாயக்கனூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கிணற்றில் இருந்து தண்ணீரை மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு செல்ல மின்மோட்டாரும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் சமரசம்இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. பக்கத்து ஊர்களில் உள்ள தனியார் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று தொப்பாநாயக்கனூர், ஆவலக்கவுடனூரை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் புங்கம்பாடி பிரிவு சாலைக்கு வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த எரியோடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதான மின்மோட்டாரை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.