ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 400 ஏக்கர் பயிர்கள் காப்பாற்றப்படும்


ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 400 ஏக்கர் பயிர்கள் காப்பாற்றப்படும்
x
தினத்தந்தி 17 March 2017 4:00 AM IST (Updated: 16 March 2017 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை,

ஆயக்கட்டு பாசனம்

பரம்பிக்குளம்– ஆழியாறு திட்டத்தின் மிகமுக்கிய அணையாக ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் கேரள நீர்ப்பாசன பகுதிகள் பயனடைந்து வருகின்றன. பழைய ஆயக்கட்டில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன நிலங்களுக்கு ஆண்டிற்கு 315 நாட்கள் தண்ணீர் திறந்து விட பி.ஏ.பி. ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பழைய ஆயக்கட்டில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இரண்டாம்போக சம்பா சாகுபடி 3 ஆயிரம் ஏக்கரில் நிறுத்தி வைக்கப்பட்டது. நெல் சாகுபடி நிறுத்தப்பட்ட நிலையில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன நிலத்தில் உள்ள தென்னை, கரும்பு, வாழை, வெற்றிலை மற்றும் தென்னை பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி ஆழியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் 5 பிரதான கால்வாய்கள் மூலம் உயிர் தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3 ஆயிரத்து 400 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்கள் காப்பாற்றப்படும்.


Next Story