வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணியிலிருந்து தண்ணீர் கொடுக்க கூடாது
தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது, என்று தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி,
தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது, என்று தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் நாள்தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கலெக்டர்கள் தீபக்ஜேக்கப், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாமிபரணி ஆற்றிலிருந்து...கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது, ‘நெல்லையில் உள்ள வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து 15 நாட்கள் உபரியாக தண்ணீர் செல்கிறது. ஆனால் ஆண்டு முழுவதும் உபரியாக செல்வதாக கூறி தண்ணீரை எடுக்கிறார்கள். ஆகையால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர வேண்டும். வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீரை எடுப்பதை தடுக்க வேண்டும்.
தேங்காய் விளைச்சல் பாதிப்புசீமை கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கருவேல மரங்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசே கருவேல மரங்களை கொள்முதல் செய்ய வேண்டும். குடிமராமத்து பணியில் தாமிரபரணி கோட்டத்தில் உள்ள குளங்களை சேர்க்க வேண்டும். பிள்ளையார்நத்தம் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியின் போது, கருவேல மரங்களை தீவைத்து எரித்தனர். அப்போது அருகில் இருந்த தென்னை மரங்கள் எரிந்து சேதம் அடைந்து விட்டன. இதனால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.
கருப்பட்டிகோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில் தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில், வங்கியின் சேவை மையத்தில் இருப்பவர்களால் முறைகேடுகள் நடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும். கருப்பட்டியில் கலப்படம் செய்யப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சீனி கருப்பட்டி தயாரிக்க உரிமம் வழங்கி உள்ளார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
விவசாயிகளுக்கு நிவாரணம்கூட்டத்தில் கலெக்டர் ரவிகுமார் பேசும் போது, ‘மாவட்டத்தில் மார்ச் மாதம் சராசரியாக 30 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். தற்போது 12 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. அணை பகுதியில் மழை பெய்து உள்ளதால் மே மாதம் முதல் வாரம் வரை குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். வறட்சி நிவாரணமாக ரூ.139 கோடி வந்து உள்ளது. இதில் ரூ.115 கோடி வேளாண் பயிர்களுக்கும், ரூ.24 கோடி தோட்டக்கலை பயிர்களுக்கும், பட்டுபூச்சி வளர்ப்புக்கு ரூ.17 ஆயிரத்து 500–ம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 1 லட்சத்து 483 விவசாயிகளுக்கு, ரூ.78 கோடியே 49 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதற்கு ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
கரம்பை மண்
மாவட்டத்தில் விவசாயிகள் கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி அளிப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 23–ந் தேதி நடந்தது. இதில் 460 விவசாயிகள் அனுமதி பெற்று 13 ஆயிரத்து 800 கனமீட்டர் அளவுக்கு கரம்பை மண் அள்ளி உள்ளனர். மாவட்டத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 421 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளனர். உளுந்து 39 ஆயிரத்து 712 எக்டரும், பாசிப்பயறு 35 ஆயிரத்து 459 எக்டரும், மக்காச்சோளம் 25 ஆயிரத்து 314 எக்டருக்கும் பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
அனல்மின் நிலையத்துக்கு...மேலும் ஜனவரி மாதம் 7–ந் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. எந்த தொழிற்சாலைக்கும் ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்படவில்லை. அனல்மின்நிலையத்துக்கு, என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் உள்ள கடல் நீர் சுத்திரிகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வந்த 85 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
குளிர்பானங்களை தவிர்க்கலாமே..பொதுப்பணித்துறையில் உள்ள ஆய்வு பிரிவு கடந்த 75 ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றில் சென்ற வெள்ளம் குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உபரிநீர் அறிக்கையை தயாரித்து உள்ளது. ஆனால் ஆண்டுக்கு 25 நாட்கள் மட்டுமே ஆற்றில் உபரிநீர் செல்கிறது. இதனை ஆண்டு சராசரியாக கொண்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. அது சரியான நடைமுறை இல்லை. தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். அந்த குளிர்பானத்தை குடிக்காமல் இருந்தாலே மூடிவிடுவார்கள். கருப்பட்டியில் கலப்படம் செய்வது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.