பொது மேலாளர் அலுவலகத்தில் நுழைய முயற்சி: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் திடீர் பரபரப்பு
நெல்லை வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயற்சித்தனர்.
நெல்லை,
நெல்லை வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது.
போராட்டம்அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அங்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக கூறி அமர்ந்தனர்.
ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், சேமநலநிதி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி. ஐ.என்.டி.யு.சி. எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். தொ.மு.ச. தலைவர் தர்மன் தலைமை தாங்கினார். தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் முருகன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சங்கரநாராயணன், சுடலைமுத்து, ஆவுடையப்பன், சந்தானம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திடீர் முற்றுகைபோராட்டத்தின் போது அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு தலைவர் மனோகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திரளானோர் கூடி, தமிழக அரசு பட்ஜெட்டில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி கோஷமிட்டனர். இதுதொடர்பாக பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். பின்னர் அவர்கள் பொது மேலாளர் அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார், முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்த போதிலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.