சோலையார், நீரார், சின்னக்கல்லார் அணைகளில் ரூ.21½ கோடி செலவில் பராமரிப்பு பணிகள் 20 ஆண்டுகளுக்கு பிறகு சோலையார் பூங்கா சீரமைக்கப்படுகிறது
சோலையார், நீரார், சின்னக்கல்லார் அணைகளில் ரூ.21½ கோடி செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வால்பாறை,
பரம்பிக்குளம்– ஆழியார் திட்டம்
தமிழ்நாட்டிலேயே சிறப்பு மிக்க ஒரு திட்டம் பரம்பிக்குளம்– ஆழியார் திட்டம். இந்த திட்டத்தில் 8 அணைக்கட்டுகள் உள்ளன. இந்த திட்டத்துக்கு முக்கிய பங்கு வைக்கும் அணைகளான சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய மூன்று அணைகளும் உள்ளன. இந்த அணைகள் வால்பாறை மலைப்பகுதியில் அமைந்துள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் தமிழக– கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளுக்கும் தண்ணீர் செல்கிறது. அதேபோல், பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை பகுதியில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கும் இந்த திட்டத்தின் மூலமே தண்ணீர் செல்கிறது.
அணைகள் பராமரிப்புஇந்த அணைகளின் பராமரிப்பு பணிகள் மத்திய அரசின் நீர்வளத்துறை ஆணையத்தின் மூலம் உலக வங்கியின் நிதி உதவியோடு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் சோலையார் அணை ரூ.16 கோடி செலவிலும், நீரார் அணை ரூ.3 கோடியே 15 லட்சம் செலவிலும், சின்னக்கல்லார் அணை ரூ.2 கோடியே 51 லட்சம் செலவிலும் என மொத்தம் ரூ.21 கோடியே 66 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முழுவீச்சில் பணிகள்இதில் அணையின் தடுப்பு சுவர்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகள், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள், தண்ணீர் திறந்துவிடும்போது தண்ணீர் வெளியாகும் பாதைகள், அணைகளில் சுரங்க கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதைகள், மின்நிலையங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதைகள் ஆகியவைகளுக்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சோலையார் அணையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழியும் காலங்களில் தானாகவே தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியாகும் சேடல்பாதையில் தடுப்புசுவர் அகலப்படுத்தப்படுகிறது. பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், அந்த பகுதிகளுக்கு பொதுப்பணி துறையினர் செல்வதற்கு வசதியாக நடைபாதைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சி நடைபெற்று வருகிறது.
பூங்கா சீரமைப்புஇதில் குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு பிறகு சோலையார் அணை பூங்கா சீரமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்த பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பூங்கா பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது அந்த பகுதி மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.