பைராப்புரா பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்


பைராப்புரா பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்
x
தினத்தந்தி 17 March 2017 3:00 AM IST (Updated: 17 March 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

பைராப்புரா பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

சிக்கமகளூரு,

பைராப்புரா பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

2 பேரை கொன்றது

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பைராப்புரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பைராப்புரா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 5 காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கடந்த 2014–ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை வழிமறித்த காட்டு யானைகள், அவரை மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசி தந்தத்தால் குத்திக் கொன்றன. மேலும் காபி தோட்ட தொழிலாளி ஒருவரையும் காட்டு யானை கொன்றது.

மாநில அரசுக்கு கடிதம்

இதனால் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானைகளை பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாவட்ட வனத்துறை அதிகாரி மாணிக், பைராப்புரா பகுதியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் 5 காட்டு யானைகளையும் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

கும்கி யானைகள் வரவழைப்பு

அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட மாநில அரசும், அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறையினருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனுமதி வழங்கியது. இதையடுத்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்காக குடகு மாவட்டம் துபாரே யானைகள் முகாமில் இருந்து 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்ட வனத்துறை அதிகாரி மாணிக் தலைமையிலான வனத்துறையினர் பைராப்புரா பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் கடந்த 2 நாட்களாக வனத்துறையினரின் கண்ணில் 5 காட்டு யானைகளும் சிக்கவில்லை.

மயக்க ஊசி செலுத்தப்பட்டது

நேற்று காலையும் வனத்துறையினர் காட்டு யானைகளை தீவிரமாக தேடிவந்தனர். அப்போது பைராப்புரா கிராமத்தை சேர்ந்த சந்திரேகவுடா என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் ஒரு காட்டு யானை நின்று கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது காட்டு யானை காபி தோட்டத்திற்குள் நின்று கொண்டு இருந்தது. இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் துப்பாக்கி மூலம் காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். மயக்க ஊசி யானையின் மீது பட்டதும் யானை பிளிறியபடி சிறிது தூரம் ஓடி மயங்கி விழுந்தது.

அதன்பின்னர் யானையை வனத்துறையினர் சங்கிலியால் கட்டினார்கள். இதனை தொடர்ந்து மயக்கம் தெளிவதற்காக கால்நடை மருத்துவர் யானைக்கு ஊசி போட்டார். அப்போது எழுந்து நின்ற யானை பயங்கரமாக பிளிறியது. அந்த யானையை கும்கி யானைகள் ஆசுவாசப்படுத்தின. இதனை தொடர்ந்து பிடிபட்ட யானையை கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் அழைத்து சென்று லாரியில் ஏற்றினார்கள்.

கே.குடி முகாமில் விடப்படும்

இதுகுறித்து வனத்துறை அதிகாரி மாணிக் கூறுகையில், பைராப்புரா பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானைகளில் ஒரு காட்டு பிடிக்கப்பட்டு விட்டது. தற்போது பிடிக்கப்பட்டு உள்ள இந்த யானை 35 வயது நிரம்பிய ஆண் யானையாகும். இந்த யானை சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பந்திப்பூர் அருகே கே.குடி பகுதியில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமில் விடப்படும். மீதமுள்ள 4 காட்டு யானைகளையும் விரைவில் பிடிப்போம் என்று கூறினார்.


Next Story