ஹரிஹரபுராவில் உள்ள ஆயுர்வேத மையத்தில் மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை பூரண குணமடைந்து நாடு திரும்பினார்


ஹரிஹரபுராவில் உள்ள ஆயுர்வேத மையத்தில் மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை பூரண குணமடைந்து நாடு திரும்பினார்
x
தினத்தந்தி 17 March 2017 2:30 AM IST (Updated: 17 March 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு மாவட்டம் ஹரிஹரபுராவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மனஅழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை இசாபெல் லுகாஸ் சிகிச்சை பெற்றார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் ஹரிஹரபுராவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மனஅழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை இசாபெல் லுகாஸ் சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் பலனாக பூரண குணமடைந்த அவர் மீண்டும் நாடு திரும்பினார்.

பிரபல ஹாலிவுட் நடிகை

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் இசாபெல் லுகாஸ் (வயது 32). இவர் பிரபல ஹாலிவுட் நடிகை ஆவார். இவர், ‘‘இம்மார்ட்டல், தி லோப்ட், ரெட் டாவ்ர்ன், டே பிரேக்கர், வெரன்ச் ஆப் தி பாலோன்’’ உள்பட 20–க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் ஆஸ்திரேலியாவில் டி.வி. தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். அதனால் புதிய படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இதனை தொடர்ந்து பாப் பாடகியும், தனது தோழியுமான ஸ்டோன் மெகானிடம் தனக்கு அதிகமான மனஅழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும், தான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஹரிஹரபுரா வந்தார்

அப்போது ஸ்டோன் மெகான் இந்தியாவில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகாவில் உள்ள ஹரிஹரபுராவில் ஆயுர்வேத சிகிச்சை மையம் உள்ளது. அந்த மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றால் மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. நானும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனஅழுத்தம் ஏற்பட்ட போது அங்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த மாதம்(பிப்ரவரி) 20–ந் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு ஹரிஹரபுராவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு இசாபெல் லுகாஸ் வந்தார். அவரை ஆயுர்வேத மையத்தின் டாக்டர் அஸ்வின்ஷெட்டி மற்றும் பலர் வரவேற்றனர்.

அனுமதி இல்லை

மேலும் ஹாலிவுட் நாட்டு நடிகை சிகிச்சைக்கு வந்து உள்ளதால் அவரை பார்க்க ஏராளமானவர்கள் வருவார்கள் என்றும், அவருக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் கருதி மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் அவரை சந்திப்பதற்காக பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சிகிச்சை அளிக்கப்பட்டது

இதனை தொடர்ந்து அவருக்கு மனஅழுத்தத்தை குறைப்பதற்காக ஆயுர்வேத முறையில் இசாபெல் லுகாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த அவர் நேற்று முன்தினம் மீண்டும் நாடு திரும்ப முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் பொதுமக்களையும், பத்திரிக்கையாளர்களையும் பார்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவரை சந்தித்து பேசுவதற்காக பொதுமக்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

பூரண குணமடைந்து...

நேற்று முன்தினம் அவரை பத்திரிக்கையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது அவர் பேசியதாவது, சினிமாத்துறை என்பது மிகவும் கஷ்டம் வாய்ந்த துறையாகும். இந்த துறையில் பல வகையான பிரச்சினைகளையும், சோதனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. எனக்கும் கடந்த சில மாதங்களாக மனஅழுத்தம் ஏற்பட்டது. இதுகுறித்து எனது தோழியும், பாப் பாடகியுமான ஸ்டோன் மெகானிடம் தெரிவித்தேன். அவர் தான் என்னை ஹரிஹரபுராவில் உள்ள ஆயுர்வேத மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வரும்படி கூறினார்.

அவரது அறிவுறுத்தலின்பேரில் நான் இங்கு வந்தேன். எனக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. நான் தற்போது மனஅழுத்தத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு பூரண குணமடைந்து உள்ளேன். என்னை போல் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த பலரும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார்

இதையடுத்து அவர் கார் மூலம் மங்களூரு விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story