பெங்களூருவில், வீடு புகுந்து கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியரை கற்பழிக்க முயற்சி அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி கைது
பெங்களூருவில் வீடு புகுந்து கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியரை கற்பழிக்க முயன்றதாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் வீடு புகுந்து கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியரை கற்பழிக்க முயன்றதாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டு இளம்பெண்பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் ஊழியராக வேலை செய்கிறார். அவர், பையப்பனஹள்ளி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அந்த இளம்பெண்ணின் சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அவர் பெங்களூருவுக்கு வந்து, கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, இளம்பெண் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தார்கள்.
அப்போது இளம்பெண்ணிடம், உங்களுடன் யாரெல்லாம் தங்கி இருக்கிறார்கள் என்று, அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருக்கும் சிவ்தாஸ் என்ற சிவு என்பவர் கேட்டுள்ளார். உடனே அவரும் தான் தனியாக வசித்து வருவதாகவும், தன்னுடன் யாரும் வசிக்கவில்லை என்றும் சிவுவிடம் கூறினார். தீ விபத்து நடந்ததால் இளம்பெண் வசித்த வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
வீடு புகுந்து கற்பழிக்க முயற்சிஇந்த நிலையில், அன்றைய தினம் இரவு 11.15 மணியளவில் இளம்பெண் தங்கி இருந்த வீட்டிற்கு காவலாளி சிவு சென்றதாக தெரிகிறது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால், அதனை சரி செய்ய வந்திருப்பதாக இளம்பெண்ணிடம் சிவு கூறியுள்ளார். இதனால் காவலாளி வீட்டிற்குள் வருவதற்கு இளம்பெண் அனுமதித்துள்ளார். இந்த நிலையில், இளம்பெண் தனியாக வசிப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காவலாளி, அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் தனக்கு முத்தம் கொடுக்கும்படி இளம்பெண்ணிடம் காவலாளி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் சிவுவை திட்டியுள்ளார். இந்த நிலையில், தன்னை திட்டிய ஆத்திரத்தில் இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி சிவு கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனால் அங்கிருந்து சிவு தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி பையப்பனஹள்ளி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த காவலாளியான சிவுவை(வயது 26) கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.