சிவமொக்கா டவுனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஜனதாதளம்(எஸ்) பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை


சிவமொக்கா டவுனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஜனதாதளம்(எஸ்) பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2017 2:11 AM IST (Updated: 17 March 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா டவுனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவமொக்கா,

சிவமொக்கா டவுனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர்

சிவமொக்கா டவுனை சேர்ந்தவர் சீனிவாஸ்(வயது 38). இவர் ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர் ஆவார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை சீனிவாஸ் சிவமொக்கா டவுனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் மாலை தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சீனிவாஸ், குறிப்பிட்ட அந்த தனியார் விடுதியில் தங்கி இருப்பதாகவும் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து உள்ளார்.

தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசின் மனைவி, குறிப்பிட்ட அந்த தனியார் தங்கும் விடுதிக்கு விரைந்து வந்தார். மேலும் விடுதியின் மேலாளருடன் சீனிவாஸ் தங்கியிருந்த அறையில் சென்று பார்த்த போது, அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசின் மனைவி அவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டபேட்டை போலீசார் தனியார் தங்கும் விடுதிக்கு விரைந்து வந்து சீனிவாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப தகராறு காரணமா?

குடும்ப தகராறு காரணமாக சீனிவாஸ் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர் ஒருவர் தனியார் தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story