9 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி


9 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இறந்த 9 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவியை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வறட்சி பாதிப்பு காரணமாக அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும் விவசாயிகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அரசு அறிக்கை கோரியது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஏற்பட்ட இறப்புகள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது. அதனை ஏற்று முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தஞ்சை மாவட்டத்தில் உயிரிழந்த 9 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

கலெக்டர் வழங்கினார்

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இறந்த சூரக்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் (வயது55), பட்டுக்கோட்டையை அடுத்த செட்டிகுட்டை காலனியை சேர்ந்த நாராயணன் (61), பூதலூரை அடுத்த அகரப்பேட்டை ரெங்கநாதபுரத்தை சேர்ந்த ஆறு முகம் (72), சாலியமங்கலத்தை அடுத்த ஆலங்குடியை சேர்ந்த முருகானந்தம் (40), மெலட்டூரை அடுத்த விழுதியூரை சேர்ந்த பெருமாள் (70), திருமலைசமுத்திரம் வடக்குத்தெருவை சேர்ந்த சசிகுமார் (43), திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் கருப்பூரை சேர்ந்த பூமிநாதன் (39), ஆலங்குடியை சேர்ந்த முருகானந்தம் (34), கீழத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (42) ஆகிய 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.27 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை கலெக்டர் அண்ணாதுரை, இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசன், வேளாண்மை இணைஇயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர்கள், தாசில்தார்கள் உடன் இருந்தனர். 

Next Story