தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன் மகன் உள்பட 4 பேர் கைது


தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன் மகன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2017 2:37 AM IST (Updated: 17 March 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

தா.பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் அவருடைய அண்ணன் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தா.பேட்டை,

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 42). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 13-ந்தேதி இரவு அப்பகுதியில் உள்ள பாத்திரக்கடை முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதர்கள், அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் மேற்பார்வையில் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் ஜெம்புநாதபுரம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இந்த கொலை வழக்கில் கனகராஜின் அண்ணன் ராமையாவின் மகன் நந்தகுமாருக்கு(19) தொடர்பிருப்பது, தெரியவந்தது.

வாக்குமூலம்

இதையடுத்து போலீசார், நந்தகுமாரை ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கனகராஜை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது சித்தப்பா கனகராஜ் குடித்துவிட்டு அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். இதனால் முன் விரோதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் தொந்தரவு கொடுத்ததால், பொறுக்க முடியாமல் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி நானும், என்னுடைய நண்பர்களான பேரூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த்(26), சதீஷ்(26), சுந்தரவேல்(21) ஆகியோரும் சென்று, பாத்திரக்கடை முன்பு தூங்கி கொண்டிருந்த கனகராஜை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து நாங்கள் தப்பியோடிவிட்டோம், என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நந்தகுமார், ஆனந்த், சதீஷ், சுந்தரவேல் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story